மேட்டூர், ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு 


மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 389 கனஅடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 795 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 389 கனஅடியாக சரிந்தது. குடிநீர் தேவைக்காக, அணையில் இருந்துவிநாடிக்கு 2,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 47.04 அடியாகவும், நீர்இருப்பு 15.99 டிஎம்சியாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக பதிவானது. ஆனால், நேற்றுகாலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாகக் குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அதிகரித்து வந்த நீர்வரத்து, தற்போது குறைந்து வருகிறது.