பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து  மதுரையில் கருப்புக் கொடி போராட்டம்


மதுரை: பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் மதுரையில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திற்கு சாமி தரிசனத்திற்காக வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிராகவும் மதுரையில் மாலை கருப்புக்கொடி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, கட்டப் பொம்மன் சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடந்தது.

வட மாநிலங்களில் நடந்த பிரச்சாரத்தின்போது, தமிழர்களை பிரதமரும், அமித்ஷாவும் இழிவாக பேசிவிட்டு, தமிழகம் வரும் போது வாக்குக்காக தமிழர்களை புகழ்வதாகவும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள் கையில் கருப்புக்கொடியேந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.