களஞ்சியம் செயலி மூலம் வருமான வரி பிடிப்பதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் @ மதுரை


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: களஞ்சியம் செயலி மூலம் வருமான வரி பிடிப்பதை கைவிடக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

களஞ்சியம் செயலி மூலம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் தன்னிச்சையாகவும், எவ்வித வரையறையின்றி வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்றது.

அதனையொட்டி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருவூலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சின்னப்பொன்னு தலைமை வகித்தார்.

இதனை சிபிஎஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜராஜேஸ்வரன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் ச.இ.கண்ணன் நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் சோ.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

x