தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதில் இடர்பாடு: புதுச்சேரி விவசாயிகள் முறையீடு


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கரும்பு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளதால் இந்த மாநிலத்தில் உற்பத்தி செய்யும் கரும்புகளை விவசாயிகள் அரசு உத்தரவோடு அருகிலுள்ள தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வருகிறார்கள். ஆனால், இதில் இடர்பாடுகள் ஏற்படுவதால் முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேளாண் துறையினரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

புதுச்சேரி வேளாண் இயக்குநர் வசந்த குமாரை ஈஐடி பாரி கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன், பொருளாளர் ஜெயராமன், செயலாளர்கள் ஆதிமூலம், பாஸ்கர், ஜெயகோபி, ஜீவானந்தம், பழனி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து அவரிடம் மனுவும் தந்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியது: “புதுச்சேரி மாநிலத்தில் கரும்பு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளதால் இங்கு உற்பத்தி செய்யும் கரும்புகளை விவசாயிகள் அரசு உத்தரவோடு அருகிலுள்ள தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புகிறோம். இதனால் எங்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த இடர்பாடுகளை போக்குவதற்கு தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகிகளை அழைத்து முத்தரப்பு கூட்டத்தை, பருவம் தொடங்குவதற்கு முன்பாக நடத்த வேண்டும்.

2022 முதல் 2024 வரை கரும்பு பயிர் செய்த விவசாயிகளுக்கு பொக்கோ போயா என்ற நோயால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதற்கான கணக்கெடுப்பும் வேளாண் துறை நடத்தியது. ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதையும் உடனடியாக வழங்க வேண்டும்.

2015-16-ல் அரியூர் சர்க்கரை ஆலை பகுதியில் இருந்து அரசு உத்தரவு பெற்று புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்பு அனுப்பினோம். இதில் சுமார் 450 டன் கரும்புக்கு இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதற்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் என்றும் முறையிட்டுள்ளோம்” என்றனர்.