சிங்கம்புணரி: பாரம்பரிய இளவட்ட மஞ்சுவிரட்டில் 400 காளைகள் பங்கேற்பு - 10 பேர் காயம்


சிங்கம்புணரியில் நடைபெற்ற இளவட்ட மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பாரம்பரிய இளவட்ட மஞ்சுவிரட்டில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கிராம மக்கள் சார்பில் இன்று சீரணி அரங்கம், பெரியகடை வீதியில் பாரம்பரிய இளவட்ட மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் காளைகளுக்கு மரியாதை செய்த பின்னர் கோயில் காளைகளை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன.

இதில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அவற்றை இளைஞர்கள் அடக்க முயன்றனர். இதில் இளைஞர்கள், பார்வையாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.