ஜூன் முதல் வாரம் வரை பருப்பு, பாமாயில் பெறலாம்: உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் அறிவிப்பு


சென்னை: மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம்பருப்பை ஜூன்முதல் வாரம் வரை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு, சிறப்புப் பொதுவிநியோகத் திட்டத்தின் வாயிலாக2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது, மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவெடுத்து, அவற்றை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இருப்பினும் அரசின் முயற்சிகள் காரணமாக கடைகளுக்கு விரைவாக பொருட்கள் அனுப்பப்பட்டு, மே 27-ம் தேதி வரை 82 லட்சத்து82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு, 75 லட்சத்து 87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

மேலும், 24 லட்சத்து 96,510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33 லட்சத்து 57,352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையிலும் 8 லட்சத்து 11,000 கிலோ துவரம் பருப்பு மற்றும் 7 லட்சத்து 15,395 பாமாயில் பாக்கெட்டுகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப இருப்பிலும் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வரவேண்டிய துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குடும்பஅட்டை தாரர்களுக்கு மே 2024மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்க அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த மாதத்துக்குள் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் ஜூன் முதல் வாரம் வரை ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மே மாதம் பெறாதவர்கள் ஜூன் மாத முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x