3-வது ஆட்டத்திலும் மே.இ.தீவுகள் வெற்றி


கிங்ஸ்டன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.

கிங்ஸ்டனில் நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ராஸி வான்டெர் டஸ்ஸன் 31 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 51 ரன்கள் விளாசினார். வியான் முல்டர் 36, குயிண்டன் டி காக் 19, ரியான் ரிக்கல்டன் 18, பேட்ரிக் க்ரூகர் 16 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஓபேட் மெக்காய் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஷமர் ஜோசப், குடகேஷ்மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

164 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது 13.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான ஜான்சன் சார்லஸ் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 69 ரன்களும், கேப்டன் பிரன்டன் கிங் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் விளாசினர். கைல் மேயர்ஸ் 23 பந்துகளில், 4 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் சேர்த்தார்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்டடி 20 கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல்போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்திலும் மேற்கு இந்தியத்தீவுகள் வெற்றி கண்டிருந்தது. ஆட்ட நாயகனாக ஜான்சன் சார்லஸும், தொடர் நாயகனாக குடகேஷ் மோதியும் தேர்வானார்கள்.

x