இந்திய அணியில் தஞ்சாவூர் மாணவி @ இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டி


பூர்ணிஷா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாதாகோட்டை சாலையைச் சேர்ந்தவர் முன்னாள் தமிழக ஹாக்கி வீரர் பாஸ்கரன். இவரது மனைவி ராணி, ஆசிரியையாக உள்ளார். இவர்களது 2-வது மகள் பூர்ணிஷா(19). கோவை தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார்.

இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாடு வீராங்கனையான பூர்ணிஷா, மாநில, தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அணிகளில் இடம் பெற்று விளையாடி பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், இத்தாலியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், பஞ்சாப் அணி மூலம் தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து பூர்ணிஷா கூறியது: தமிழகம் சார்பில் இந்த விளையாட்டுக்கான அணி இல்லாத காரணத்தால், பஞ்சாப் மாநில அணியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறேன். செப்டம்பர் மாதம் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளேன். இந்தப் போட்டிக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 15 நாட்கள் சிறப்பு பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக வெற்றி வாகை சூடி வருவேன் என்றார்.