ஆர்சிபி வெளியேறியதை கொண்டாடித் தீர்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!


ஆர்சிபி தோல்வியை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அதனைக் கொண்டாடும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அது குறித்து பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதரவாளர்கள், அன்பர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது ரியாக்‌ஷனை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு காரணம் கடந்த 18-ம் தேதி அன்று பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி தான்.

அந்தப் போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது. அதில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை காண இரு அணி ரசிகர்களும் மைதானத்துக்கு வந்திருந்தனர். போட்டி முடிந்ததும் அவரவர் வீடு திரும்பிய போது ஆர்சிபி ரசிகர்கள் தங்களிடம் அநாகரிக செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் தொப்பி, ஜெர்ஸி அணிந்திருந்த ரசிகர்களிடம் அதனை அகற்றுமாறு தெரிவித்தனர். இது இணையவெளியில் வைரல் ஆனது. தங்களது அனுபவத்தை ரசிகர்கள் சிலர் பகிர்ந்து இருந்தனர்.

இந்தச் சூழலில் இரு அணி ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் பதிவுகள், கமெண்ட்கள் மூலம் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். ‘சென்னையில் ஆர்சிபி அணிக்கு ஆதரவு அளிப்போம்’ என ஆர்சிபி ரசிகர்கள் சொல்ல, ‘அதற்கு முதலில் நீங்கள் எலிமினேட்டரில் ராஜஸ்தானை வெல்ல வேண்டும்’ என சிஎஸ்கே ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான எலிமினேட்டரில் தோல்வியை தழுவியது ஆர்சிபி. அது முதலே சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவும் ஐக்கியமானார். இருந்தும் தனது பதிவை அவர் நீக்கிவிட்டார்.

சிஎஸ்கே ரசிகர்களின் ரியாக்‌ஷன்: ‘சிஎஸ்கே ரசிகர்களை தவிர வேறு யாரும் இப்போது மகிழ்ச்சியாக இருக்க முடியாது’, ‘குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகரும் ஹேப்பி’, ‘அவர்கள் மைதானத்துக்கு வந்ததே ஆர்சிபி வீழ்ச்சியை பார்க்க தான்’ என பதிவுகள் நீண்டன.

‘அடுத்த முறை கோப்பை நமதே’ என பேனருடன் ஆர்சிபி வீழ்ச்சியை கொண்டாடினர் திரிபுரா சிஎஸ்கே ரசிகர்கள். சிஎஸ்கே அணியின் சூப்பர் ரசிகர் சரவணன், தனது கையில் 5 ஸ்டார் சாக்லேட் வைத்துள்ள பதிவு ஒன்றை பதிவிட்டார். அதன் மூலம் சிஎஸ்கே 5 முறை கோப்பை வென்ற அணி என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இன்னும் சில சிஎஸ்கே ரசிகர்கள், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆர்சிபி அணிக்கு கோப்பை வெல்வது கனவாக மட்டுமே இருக்கும் என்றும். ஆணவத்தில் ஆடினால் இதுதான் நடக்கும் என்றும் சொல்லி இருந்தனர்.