மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு சிந்து முன்னேற்றம்


கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோருடன் மோதினார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள சிந்து 21-17, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 46 நிமிடங்கள் நடைபெற்றது. 2-வது சுற்றில் சிந்து, கொரியாவின் சிம் யு ஜின்னுடன் மோதுகிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, ஷிக்கி ரெட்டி ஜோடியானது ஹாங்காங்கின் லியு ஹன் வெய், ஷி யன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் ரெட்டி, ஷிக்கி ரெட்டி ஜோடி 21-15, 12-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.