இறுதிப் போட்டியில் கால்பதித்து தென் ஆப்பிரிக்க அணி சாதனை: ஆப்கானிஸ்தானை 56 ரன்களில் சுருட்டி வீசியது | T20 WC


டிரினிடாட்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி.

மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் அரை இறுதி ஆட்டத்தில் எடுக்கப்பட்ட குறைந்த ஸ்கோராக இது அமைந்தது. கிரீன் டாப் ஆடுகளத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு முதல் 5 ஓவர்களுக்குள்ளேயே ஆப்கானிஸ்தான் அணியை முடக்கினர்.

மார்கோ யான்சன் வீசிய முதல் ஓவரிலேயே ரஹ்மனுல்லா குர்பாஸ் (0) சிலிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து தனது அடுத்த ஓவரில் குல்பாதின் நயீப்பை 9 ரன்னில் போல்டாக்கினார் மார்கோ யான்சன். காகிசோ ரபாடா வீசிய 3-வது ஓவரில் இப்ராகிம் ஸத்ரன் (2) ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதே ஓவரில் முகமது நபியும் (0) போல்டாகி நடையை கட்டினார். தொடர்ந்து நங்கேயாலியா கரோட் 2 ரன்னில் மார்கோ யான்சன் பந்தில் விக்கெட்டை இழந்தார்.

23 ரன்களுக்கு 5 விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்த நிலையில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 10 ரன்கள் எடுத்த நிலையில் அன்ரிச் நோர்க்கியா பந்தில் வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய கரிம் ஜனத் (8), நூர் அகமது (0), நவீன் உல் ஹக் (2) ஆகியோரை தப்ரைஸ் ஷம்சி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். ரஷித் கான் 8 ரன்களில் நோர்க்கியா பந்தில் ஸ்டெம்ப் சிதற நடையை கட்டினார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ யான்சன், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ரபாடா, நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

57 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 25 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 21 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களும் சேர்த்தனர். முன்னதாக குயிண்டன் டி காக் 5 ரன்னில் பசல்ஹக் பரூக்கி பந்தில் போல்டானார்.

ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி இதற்கு முன்னர் 7 முறை அரை இறுதி சுற்றில் விளையாடி இருந்த போதிலும் ஒரு முறை கூட வெற்றி கண்டது இல்லை. இந்த தடைகளை தற்போது தகர்த்து முதன்முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்து சாதனை படைத்துள்ளது.

பெரிய வெற்றி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 67பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. இந்த வகையில் டி 20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 51 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.

மோசமான சாதனை: டி 20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது ஐசிசி முழு நேர அந்தஸ்து பெற்ற அணிகளில் மிக குறைந்த ஸ்கோராக அமைந்தது. மேலும் சர்வதேச டி 20 அரங்கிலும், உலகக் கோப்பை தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணியின் குறைந்த ஸ்கோராகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக 72 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது.