ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் மகத்தான சாதனை | T20 WC


கிங்ஸ்டவுன்: டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சி தோல்வியுறச் செய்து மகத்தான சாதனையை புரிந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிமேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்ற சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதின. வலுவானஆஸ்திரேலிய அணி, எளிதில் ஆப்கானிஸ்தானை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரன் ஆகியோர் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு கூட்டாக 118 ரன்கள் குவித்தனர். குர்பாஸ் 60 ரன்களும் (49 பந்துகள், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்), ஸத்ரன் 51 ரன்களும் (48 பந்துகள், 6 பவுண்டரிகள்) குவித்து ஆட்டமிழந்தனர். அஸ்மத்துல்லா 2, கரீம் ஜனத் 13, ரஷித்கான் 2, நபி 10, குல்பதீன் 0, நங்கேயெல்லா கரோட்டே ஒரு ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 3, ஆடம் ஸாம்பா 2, ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட் சாய்த்தனர்.

இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. ஆனால் முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டை, ஆட்டமிழக்கச் செய்தார் நவீன் உல் ஹக். டேவிட் வார்னர் 3 ரன்களில் நபி பந்திலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 13 ரன்களில், நவீன் உல் ஹக் பந்திலும் வீழ்ந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி சரிவுக்குள்ளானது.

அதன் பிறகு 4-வது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த கிளென் மேக்ஸ்வெல்லும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸும் நிதானமாக ஆடினர்.

ஆனால் ஸ்டாய்னிஸ் 11 ரன்கள் எடுத்திருந்தபோது குல்பதின் பந்தில் வீழ்ந்தார். ஆனால் மறுமுனையில் மேக்ஸ்வெல் ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிம்டேவிட் 2, மேத்யூ வேட் 5, பாட் கம்மின்ஸ் 3, அஷ்டன் அகர் 2, ஆடம் ஸாம்பா 9 ரன்கள் எடுத்து வீழ்ந்ததால் தோல்வி காண நேரிட்டது. மேக்ஸ்வெல் மட்டும் நிலைத்து விளையாடி 59 ரன்கள் எடுத்தார். ஜோஷ் ஹசில்வுட் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 19.2 ஓவர்களில் 127ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது. இதையடுத்து 21ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைவீழ்த்தி மகத்தான சாதனையை ஆப்கானிஸ்தான் புரிந்தது. சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆப்கானிஸ்தான் அணி பெறும் முதல் வெற்றியாகும் இது.

ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நயீப் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார். நவீன் உல் ஹக் 3 விக்கெட்களையும், ஒமர்சாய், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

2 முறை ஹாட்ரிக்; கம்மின்ஸ் அசத்தல்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தின் 18-வதுஓவரின் கடைசி பந்தில் ரஷித் கானையும், 20-வது ஓவரின் முதல் 2 பந்துகளில் கரீம் ஜனத், குல்பதீன் நயீப் ஆகியோரது விக்கெட்களையும் கம்மின்ஸ் கைப்பற்றினார். இதையடுத்து ஒரே உலகக் கோப்பை போட்டியில் 2 முறை ஹாட்ரிக் நிகழ்த்திய வீரர் என்ற மகத்தான சாதனையைப் புரிந்தார் கம்மின்ஸ்.

2 நாட்களுக்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதையடுத்து டி20 உலகக் கோப்பை போட்டியில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் கம்மின்ஸும் இணைந்தார். இதற்கு முன்பு லசித் மலிங்கா (இலங்கை), டிம் சவுத்தி (நியூஸிலாந்து), மார்க் பாவ்லோவிக் (செர்பியா), வசீம் அப்பாஸ் (மால்டா) ஆகியோர் டி20 உலகக் கோப்பை போட்டியில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தனர். ஆனால் ஒரே உலகக் கோப்பையில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை கம்மின்ஸ் புரிந்தார்.