தாய்லாந்து ஓபன்: அரை இறுதியில் சாட்விக் - ஷிராக் ஜோடி


பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மெய்ராபா லுவாங் மைஸ்னம், தாய்லாந்தின் குன்லவுத் விதித்சரணுடன் மோதினார். இதில் மெய்ராபா லுவாங் மைஸ்னம் 12-21, 5-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஜூனைதி ஆரிப், ராய் கிங் யப் ஜோடியுடன் மோதியது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-6, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.

மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி கொரியாவின் லீ யு லிம், ஷின் சியூங் ஷான் ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-15, 21-23, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.