மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா | T20 WC


ஆன்டிகுவா: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் தவ்ஹித் ஹிரிடோய் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் எடுத்தனர். லிட்டன் தாஸ் 16, தஸ்கின் அகமது 13 ரன்கள் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 3, ஆடம் ஸாம்பா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 141ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 11.2ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டிராவிஸ் ஹெட்21 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு ரன்னும் எடுத்த நிலையில் ரிஷாத் ஹோசைன் பந்தில் ஆட்டமிழந்தனர்.

டேவிட் வார்னர் 35 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில்ஆஸ்திரேலியா 72 ரன்கள் எடுத்திருந்தாலே போதுமானதாக இருந்தது. ஆனால் அந்த அணி100 ரன் விளாசியிருந்ததால் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தார். 31 வயதான பாட் கம்மின்ஸ் 18-வதுஓவரின் கடைசி இரு பந்துகளில்வங்கதேசத்தின் மஹ்மதுல்லாவையும் (2), மெஹிதி ஹசனையும் (0) ஆட்டமிழக்கச்செய்தார். தொடர்ந்து தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் தவ்ஹித் ஹிரிடோயையும் (40) வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தப்படுவது இது 7-வது முறையாகும். இதற்குமுன்னர் 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, 2021-ல் அயர்லாந்தின் கர்டிஸ் கேம்பர், இலங்கையின் வனிந்து ஹசரங்கா, தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, 2022-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் கார்த்திக் மெய்யப்பன், அயர்லாந்தின் ஜோசுவா லிட்டில் ஆகியோரும் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

x