நியூஸி.யை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் மகத்தான வெற்றி | T20 WC


கயானா: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியை வீழ்த்தி மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான், நியூஸி லாந்து அணிகள் நேற்று கயானாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோதின. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள இப்ராஹிம் ஸத்ரான் 41 பந்துகளில் 44 ரன்களும், குர்பாஸ் 56 பந்துகளில் 80 ரன்களும் (5 பவுண்டரி கள், 5 சிக்ஸர்கள்) விளாசினர்.

அஸ்மத்துல்லா 22 ரன்கள் சேர்த்தார். பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடியது. பசல்ஹக் பரூக்கி, ரஷித் கான், நபி ஆகியோர் அபாரமாக பந்து வீசி நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தனர்.

டேவன் கான்வே 9, கேப்டன் கேன் வில்லியம்ஸன் 9, டேரில் மிட்செல் 5, கிளென் பிலிப்ஸ் 18, மார்க் சாப்மேன் 4 ரன்கள் எடுத்து
வீழ்ந்தனர். இறுதியில் டிரெண்ட் போல்ட் மட்டும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

15.2 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்து மிக மோசமான தோல்வியை நியூஸிலாந்து சந்தித்தது. பசல்ஹக் பரூக்கி 3.2 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக் கெட்களைக் கைப்பற்றினார். ரஷித் கான் 4 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களைச் சாய்த்தார். ஆட்டநாயகனாக 80 ரன்கள் குவித்த குர்பாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது. நியூஸிலாந்து தனது முதல் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தானிடம் மோசமான தோல்வி கண்டுள்ளது.

இந்த வெற்றி மிகவும் சிறப்பானது: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றி மிகவும் சிறப்பானது என்று ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் கூறினார். அவர் மேலும் கூறும்போது, “நியூஸிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. இதுபோன்ற வெற்றிக்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம். எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பேட்டிங், பந்துவீச்சில் எங்களின் சிறப்பான செயல்திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப் படுகிறேன்” என்றார்.