T20 WC | 78 ரன் இலக்கை போராடி வென்ற உகாண்டா


கயானா: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினியாவை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியது உகாண்டா அணி.

மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நேற்று நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்தபப்புவா நியூ கினியா 19.1 ஓவரில்77 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹிரி ஹிரி 15, லேகா சியாகா 12, கிப்லின் டோரிகா 12 ரன்கள் சேர்த்தனர். உகாண்டா அணிசார்பில் அல்பேஷ் ராம்ஜானி, காஸ்மாஸ் கியூட்டா, ஜுமா மியாகி, பிராங்க் சுபுகா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

78 ரன்கள் இலக்குடன் பேட் செய்த உகாண்டா 2.1 ஓவரில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தள்ளாடியது. ரோஜர் முகாசா 0,சைமன் செசாசி 1, ராபின்சன் ஒபுயா1 ரன்களில் நடையை கட்டினர்.

மேற்கொண்டு 20 ரன்களை சேர்ப்பதற்குள் மேலும் 2 விக்கெட்களை உகாண்டா பறிகொடுத்தது. அல்பேஷ் ராம்ஜானி 8, தினேஷ் நக்ரானி 0 ரன்களில் வெளியேறினர். 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ரியாசாத் அலி, ஜுமா மியாகி ஜோடி நிதானமாக விளையாடியது.

இவர்கள் கூட்டாக 35 ரன்கள் சேர்க்க உகாண்டா அணி 60 ரன்களை கடந்தது. ஜுமா மியாகி 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். வெற்றிக்கு 3 ரன்கள்தேவையாக இருந்த நிலையில் ரியாசாத் அலி ஆட்டமிழந்தார். அவர், 56 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் கென்னத் வைஸ்வா 7 ரன்கள் சேர்க்க உகாண்டா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் குறைந்த இலக்கை துரத்திய உகாண்டா அணியால் போராடியே வெற்றி பெற முடிந்தது. 33 ரன்கள் சேர்த்தரியாசாத் அலி, இரு முறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்திருந்தார்.

அறிமுக அணியான உகாண்டாவுக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்தது

x