யுவா கபடி தொடர் இறுதிப் போட்டியில் வேல்ஸ் - கற்பகம் அணிகள் இன்று மோதல்


கோப்புப் படம்

சென்னை: யுவா கபடி தொடரில் தமிழக கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையை அடுத்த பொன்னேரியில் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் இந்த தொடரில் கலந்து கொண்டன.

இந்தத் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் - என்.ஏ. அகாடமி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 42-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் கற்பகம் பல்கலைக்கழகம் அணி 36-33 என்ற புள்ளிகள் கணக்கில் பிரிஸ்ட் பல்கலைக்கழக அணியை தோற்கடித்தது. இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் வேல்ஸ் பல்கலைக்கழகம் - கற்பகம் பல்கலைக்கழகம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த இரு அணிகளும் நடப்பு தொடரில் 3-வது முறையாக மோத உள்ளன. லீக் சுற்றில் வேல்ஸ் அணி 32-29 என்ற புள்ளிகள் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. இதற்கு பூஸ்டர் சுற்றில் கற்பகம் அணி 41-26 என்ற புள்ளிகள் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்திருந்தது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணி ரூ.10 லட்சம் பெறும்.

x