அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்: முதல் போட்டியில் சென்னை வருமான வரித் துறை அணி வெற்றி @ கோவை


கோவையில் நடந்த அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டியின் பெண்கள் பிரிவில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தி திருவனந்தபுரம் கேரள மாநில மின்சார வாரிய அணி வெற்றி பெற்றது | படம்: ஜெ.மனோகரன். 

கோவை: ஆண்கள், பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், அகில இந்திய அளவில் ஆண்களுக்கான 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை கூடைப்பந்து போட்டி, பெண்களுக்கான 21-வது சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டி, வஉசி பூங்கா மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று ( ஜூன் 5) தொடங்கியது. இப்போட்டிகள் வரும் 9-ம் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரி துறை அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, பெங்களூரு பாங்க் ஆஃப் பரோடா அணி, லக்னோ உத்தரபிரதேச போலீஸ் அணி, புதுடெல்லி மத்திய செயலக அணி, சென்னை லயோலா அணி, திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரிய அணி, கோவையின் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் அணிகள் பங்கேற்கின்றன.

பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரிய அணி, மும்பை மத்திய ரயில்வே அணி, மும்பை மேற்கு ரயில்வே அணி, சென்னை தென்னக ரயில்வே அணி, சென்னை ரைசிங் ஸ்டார் அணி, கொல்கத்தா கிழக்கு இந்திய அணி, செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே அணி, கோவையின் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகியவை பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் முதல் போட்டியில் சென்னை வருமான வரித்துறை அணியும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியும் மோதின. இதில் சென்னை வருமான வரித்துறை அணி 88 - 75 என்ற புள்ளிக்கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது.

அதேபோல், பெண்களுக்கான பிரிவில் முதல் போட்டியில் திருவனந்தபுரம் கேரள மாநில மின்சார வாரிய அணியும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியும் மோதின. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 99-க்கு 42 என்ற புள்ளிக்கணக்கில் கூடைப்பந்துக்கழக அணியை வீழ்த்தியது. தொடர்ந்து ஆண்கள் பிரிவில் இரண்டாவது போட்டியில் திருவனந்தபுரம் கேரள மாநில மின்சார வாரிய அணியும், புதுடெல்லி மத்திய செயலக அணியும் மோதின. பெண்கள் பிரிவிலும் போட்டிகள் நடந்தன.

தொடர்ந்து பெண்கள் பிரிவில் 2-வது போட்டியில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணியும், சென்னை ரைசிங் ஸ்டார் அணியும் மோதின. இதில் கிழக்கு ரயில்வே அணி 81-க்கு 71 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ரைசிங் ஸ்டார் அணியை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணியும், மும்பை மேற்கு ரயில்வே அணியும் மோதின. இதில் தென் மத்திய ரயில்வே அணி 80-க்கு 45 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.

x