கல்வாய் ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலம்


வண்டலூர் அருகே கல்வாய் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

வண்டலூர்: வண்டலூர் அருகேயுள்ள கல்வாய்கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயில்உள்ளது. இங்கு அக்னி வசந்த மகோற்சவம் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும்மகாபாரத இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தீமிதி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை மூலவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் முன் பெண்கள் பொங்கல்வைத்து, படையலிட்டு அம்மனை வழிபட்டனர். மாலையில் உற்சவர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

காப்பு கட்டி விரதமிருந்த ஆண்,பெண் பக்தர்கள் பூங்கரகத்தை சுமந்தபடி கோயிலை வந்தடைந்தனர். பின்னர், கோயில் வளாகத்தில் இருந்து அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து, திரவுபதி அம்மனை வழிபட்டனர்.

இரவு வாணவேடிக்கை, அம்மன் திருவீதி உலா நடைபெற்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

x