மதுரை காளமேக பெருமாள் கோயிலில் உற்சவ சாந்தி


மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் | கோப்புப் படம்

மதுரை: மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவு பெற்றது.

மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் பாண்டிய நாட்டு திவ்யதேசங்கள் 18-ல் முக்கியமானது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியஇருவராலும் பாடல் பெற்றதலமாகும். இங்கு வேண்டுவோர்க்கு, வேண்டியதை வழங்கும் மூர்த்தியாக சக்கரத்தாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

இக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா கடந்த 15-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் ஸ்ரீதேவிபூதேவி தாயாருடன் வழித்துணை பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10-ம் நாள் திருமஞ்சனம்... ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், ஹனுமன் வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், வைரச் சப்பரம், குதிரை வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள், 9-ம் நாள் சட்டத்தேரில் எழுந்தருளினார். 10-ம்நாள் திருமஞ்சனம் முடிந்து, இரவு தோளுக்கினியானில் எழுந்தருளினார்.

நிறைவு நாளான நேற்று காலையில் உற்சவ சாந்தி, திருமஞ்சனம் முடிந்து, வழித்துணை பெருமாள் இருப்பிடம் சேர்ந்தார். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அ.இளங்கோவன் தலைமையிலான பணியாளர்கள் செய்துஇருந்தனர்.