சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் வைகாசி திருவிழா தொடக்கம்: ஜூன் 3-ல் தேரோட்டம்


சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்தடன் துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் சுவாமி தலைமைப்பதியில் 11 நாள் வைகாசி திருவிழா இன்று துவங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அய்யாவிற்கு பணிவிடை, கொடிபட்டம் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் குரு சுவாமி தலைமையில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் காவி தலைப்பாகை அணிந்து பங்கேற்றனர். மதியம் வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதலும் நடைருகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, மற்றும் அய்யாவழி சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். 8-ம் திருவிழாவான மே 31-ம் தேதி மாலையில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

10-ம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான ஜூன் 3-ம் தேதி மதியம் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருள, தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்கவுள்ளனர்.

x