கரந்தை கருணா சுவாமி கோயிலில் சப்தஸ்தான விழா: கண்ணாடி பல்லக்கில் சுவாமி புறப்பாடு


தஞ்சாவூர் கருணாசாமி கோயிலில் இருந்து ஏழூர் பல்லக்கு இன்று காலை புறப்பட்டது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் பெரிய நாயகி அம்பாள் சமேத கருணாசாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு ஏழூர் பல்லக்குத் திருவிழா கடந்த 9-ம் தேதி, ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (மே 24) காலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ சோமாஸ் கந்தர், ஸ்ரீ பெரிய நாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். அதைபோல, வெட்டிவேர் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கை தோளில் சுமந்தபடி கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

பின்னர் பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (கரந்தை), தஞ்சை புரீஸ்வரர் திருக்கோவில் (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் ( திருதென்குடி திட்டை), சொக்கநாதர் திருக்கோயில் ( கூடலூர்), ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் (கடகடப்பை), கைலாசநாதர் திருக்கோயில் (புன்னைநல்லூர்), பூமாலை வைத்தியநாதர் திருக்கோயில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கும் புறப்பட்டுச் சென்றன.

ஏழூர் புறப்பாடு முடிந்ததும் நாளை (25ம் தேதி) சுவாமி கோயிலுக்கு வந்தடைந்ததும் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். இன்றைய விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.