பவுர்ணமி தினம்: திருச்செந்தூரில் 2-வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று குவிந்த பக்தர்கள் கூட்டம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாகத் திருவிழாவை தொடர்ந்து பவுர்ணமியை முன்னிட்டு இரண்டாவது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் கடற்கரையில் குவிந்தனர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால் அவைகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் வைகாசி திருவிழாவைத் தொடர்ந்து, பவுர்ணமியை முன்னிட்டு இரண்டாவது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் குவிந்தனர்.

பக்தர்கள் இரவு முழுவதும் கோயில் கடற்கரையில் தங்கியிருந்து காலையில் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து நேற்று காலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பெருந்திட்ட வளாக பணிகள் நடப்பதால் அங்கு போதிய அளவில் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லாததால் நகரின் வெளியே பக்தர்களின் வசதிக்காக 5 இடங்களில் தற்காலிகமாக வாகனம் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வந்ததால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நகரில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் பேருந்து நிலையம், டிபி சாலை, செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், செந்தில் முருகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், காய்கறி மார்க்கெட் மற்றும் சாலையோரப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் இரவு, பகலாக வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் வாகனங்கள் குவிந்ததால் நகரின் வெளிப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்

மேலும் பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப அடிப்படைத் தேவையான கழிப்பறை குளியலறை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினங்களில் பெரிய திருவிழாக்களை மிஞ்சும் வகையில் பக்தர்கள் குவிந்து வருவதால் நகரமே ஸ்தம்பித்து விடுகிறது.

எனவே அடுத்து வரும் நாட்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, ஊருக்கு வெளியே நிரந்தரமாக கார் பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.