திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் திருவிழா: கொட்டிய மழையிலும் தேரை இழுத்த பக்தர்கள்


திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி திருவிழாவில்  கொட்டிய மழையில் தேரை இழுத்த பக்தர்கள்.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் திருத்தளிநாதர் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி கொட்டிய மழையிலும் பக்தர்கள் தேரை இழுத்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி திருவிழா மே 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. மே 17-ம் தேதி திருக்கல்யாண வைபவம், இரவு மின்னொளி அலங்கார பூப்பல்லக்கு நடைபெற்றது. இன்று தேரோட்டம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதர்.

இதையொட்டி பிரியாவிடையுடன் திருத்தளிநாதர், சிவகாமி அம்மன், விநாயகர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து மாலையில் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது மழை பெய்தது. இதனால் சிறிதுதூரம் கொட்டிய மழையிலும் தேரை இழுத்தனர்.

பின்னர் பலத்த மழை பெய்ததால் ஒரு மணி நேரம் தேர் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதும் மீண்டும் தேர் இழுக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

x