வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம்: புதுச்சேரி ஆளுநர், முதல்வர் வடம் பிடித்து இழுத்தனர்!


புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் உள்ளிட்டவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுவை வில்லியனுாரில் பிரசித்திபெற்ற கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. புதுவை துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தேரோட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணக்குமார், எதிர்கட்சித்தலைவர் சிவா மற்றும் திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அதிகாரி, சிவனடியார்கள், சிவாச்சாரியார்கள், உற்சவ மரபினர்கள் செய்திருந்தனர். கோயிலுக்கு வந்த ஆளுநர், முதல்வர் அமைச்சர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர், முதல்வர் அமைச்சர்கள் திருக்காமீஸ்வரர், கோகிலாம்பாள் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தேரோட்டத்தை தொடங்கி வைத்த ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ''ஆன்மிகத்தில் உள்ள பிடிப்பின் காரணமாகத்தான் தனி மனித ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே ஆன்மிகம் தழைத்தோங்க வேண்டும். அப்போதுதான் மக்களின் மனம் செம்மை அடையும்.'' என்றார்.