ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் - நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடக்கம்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவத்தையொட்டி, நேற்று வசந்த மண்டபத்தில் உபயநாச்சியார்களுடன் சேவை சாதித்த நம்பெருமாள்.

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவத்தின்போது, நம்பெருமாள் கோயிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடன் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சந்நிதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். இந்த உற்சவத்தையொட்டி மே 23-ம் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்துக்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார்.

அங்கு மண்டபத்தின் நடுவில் நம்பெருமாள் சேவை சாதிப்பார். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். இதன்படி, வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்துக்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்குப் பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

x