கனமழை எதிரொலி: வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்க அறிவுரை


பிரதிநிதித்துவப் படம்

கோவை: மழை காலம் முடியும் வரை வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு சுமார் 6 கி.மீ. மலைப் பாதையில் செல்ல வேண்டும். இங்குள்ள 7-வது மலையின் உச்சியில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழாண்டில் பிப்ரவரி மாதம் முதல் மே இறுதி வரை பக்தர்கள் மலை ஏறலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களை வனத்துறை அனுமதித்து வந்தது. அதேவேளையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் சுமார் 9 பேர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்தனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளியங்கிரி மலைப் பாதையில் பக்தர்கள் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளியங்கிரி மலைக்குச் செல்வதை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராம சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் வழுக்கி விழும் சூழல் உள்ளது. இதனால், வெள்ளியங்கிரி மலை ஏற முடியாது. மலை உச்சியில் கடும் குளிர் நிலவி வருகிறது. மழை காலம் முடியும் வரை பக்தர்களின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறோம்’’ என்றார்.

இதுகுறித்து, போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் கூறும்போது, ‘‘வெள்ளியங்கிரி மலை ஏற வரும் மே 31-ம் தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி உண்டு. நிகழாண்டில் இதுவரை 2.20 லட்சம் பேர் வெள்ளியங்கிரி மலை ஏறி உள்ளனர். கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக ஏறியுள்ளனர்’’ என்றார்.

x