தருமபுரம் ஆதீன மடத்தின் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில், 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற ஆண்டு பெருவிழா கொடியேற்றம்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கொடியேற்றம் இன்று (மே 20) நடைபெற்றது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில், ஆண்டு தோறும் ஆண்டு பெருவிழா, ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பஞ்ச மூர்த்திகள் கோயில் கொடி மரத்துக்கு எழுந்தருளினர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 23-ம் தேதி திருமுறை திருவிழா, 26-ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் திருஞானசம்பந்தர் குருபூஜை, 28-ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், 29-ம் தேதி காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 30-ம் தேதி இரவு தருமபுரம் ஆதீனம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டினப்பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கும் கொலு காட்சி நடைபெறுகிறது.

விழாவையொட்டி நாள் தோறும் சமய கருத்தரங்குகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சிந்தனை அரங்கம், கவியரங்கம், சொல்லரங்கம், சொற்பொழிவு, சமய பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடந்த 2022-ம் ஆண்டு பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.