திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


திருநள்ளாறில் நேற்று நடைபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டத்தில், மழையில் நனைந்தவாறு தேர் இழுத்த பக்தர்கள். (உள்படம்) தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த செண்பக தியாகராஜ சுவாமி.படம்: வீ.தமிழன்பன்

திருநள்ளாறு: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 5 தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் அமைந்துள்ள, பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும்.

நடப்பாண்டு விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 12-ம் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, 13-ம் தேதி உன்மத்த நடனத்துடன் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, 14-ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் இருந்துஇந்திர விமானத்தில் உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளும் நிகழ்வு, 17-ம் தேதிஇரவு தங்க ரிஷப வாகனத்தில்பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

செண்பக தியாகராஜ சுவாமி: முக்கிய நிகழ்வான 5 தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, செண்பக தியாகராஜ சுவாமி நேற்று முன்தினம் இரவுதேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று அதிகாலை தேரோட்டம் தொடங்கியது.

புதுச்சேரி அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன்குமார், திருநள்ளாறு எம்எல்ஏ பி.ஆர்.சிவா, நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காலை10 மணிக்குப் பிறகு பரவலாக மிதமான மழை பெய்த நிலையில், பக்தர்கள் மழையில் நனைந்தவாறே வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு வீதிகளையும் சுற்றி வந்த பின்னர் மாலை தேர்கள் மீண்டும் நிலையை அடைந்தன. இதையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று (மே 20) இரவு செண்பகதியாகராஜ சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்துக்கு எழுந்தருளல் மற்றும் சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளும் சகோபுர வீதியுலா, நாளை (மே 21) இரவு தெப்போற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.