திருத்தளிநாதர் கோயில் நடந்த பூப்பல்லக்கு திருவிழா @ திருப்பத்தூர்


திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி திருவிழாவில் மின்னொளி அலங்கார பூப்பல்லக்கில் திருவீதி உலா வந்த சிவகாமி அம்மன்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, மின்னொளி அலங்கார பூப்பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி திருவிழா மே 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அன்று இரவு மின்னொளி அலங்கார பூப்பல்லக்கில் சிவகாமி அம்மனும், யானை வாகனத்தில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதரும் மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் திரு வீதி உலா வந்தனர். பூப்பல்லக்கு ஊர்வலமானது நான்கு ரோடு, தேரோடும் வீதி, அஞ்சலக வீதி, பேருந்து நிலையம் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தது.

சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதர்.

வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சோழிய வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர். தொடர்ந்து, மே 21-ம் தேதி தேரோட்டமும், மே 22-ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடை பெறுகின்றன.