ஆவுடையார்கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 


புதுக்கோட்டை: திருவாசகம் இயற்றப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தேரோட்டத் திருவிழா இன்று (ஜூலை 10) நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உள்ள யோகாம்பாள் உடனுறை ஆத்மநாத சுவாமி கோயிலானது மிகவும் சிறப்பு பெற்றது. கற்சிற்பங்களால் கலை நயத்தோடு கட்டப்பட்ட, திருவாசகம் இயற்றப்பட்ட இக்கோயிலில், ஆனி திருமஞ்சனத் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் கோயிலில் உற்சவராக உள்ள மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காட்சி அளித்து வந்தார். முக்கியத் திருவிழாவான தேரோட்டத் திருவிழா இன்று காலை தொடங்கி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் எழுந்தருளினார். தேவாரம், திருவாசகம் பாடிக்கொண்டு இசைக்கருவிகளை சிவனடியார்கள் இசைத்தபடி தேரோட்டம் தொடங்கியது.

திரளான பக்தர்கள் பேரின் வருடங்களைப் பிடித்து 4 வீதிகளிலும் இழுத்து வந்தனர். தேரோட்டத் திருவிழாவுக்கான பணிகளை திருவாவடுதுறை ஆதீனத்தினர் மற்றும் பக்தர்கள் செய்தனர். தேரோட்ட திருவிழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புப் பணிகளை ஆவுடையார்கோவில் போலீஸார் செய்திருந்தனர்.