திருச்செங்கோடு | திருமலையிலிருந்து இறங்கி புஷ்ப பல்லக்கில் அர்த்தநாரீஸ்வரர் நகர் பிரவேசம்


வைகாசி விசாகத் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்செங்கோட்டில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த அர்த்தநாரீஸ்வரர். (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர்.

நாமக்கல்: வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு திருமலையிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் இறங்கி புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி நகரப் பிரவேசம் நடந்தது. தொடர்ந்து, 18 கிராமங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

திருச்செங்கோடு மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் 14 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்வேறு வாகனங்களில் வலம்: தொடர்ந்து, தினசரி கட்டளை தாரர்கள் சார்பில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. 4-ம் நாளான நேற்று முன்தினம் அர்த்த நாரீஸ்வரர் சுவாமி திருமலையிலிருந்து இறங்கி படிக்கட்டு மண்டபங்களில் கட்டளைதாரர்களின் சிறப்பு பூஜைகளை ஏற்று நள்ளிரவில் மலையடிவாரத்தை வந்தடைந்தார்.

நேற்று (18-ம் தேதி) புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி நகரப் பகுதியில் பரிவார மூர்த்திகளுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, திருச்செங்கோடு நகரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

களைகட்டும் தேரோட்டம்: வீதி உலாவின்போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோயில்களுக்குச் செல்லும் சுவாமிக்கு வழி நெடுக சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளன. இதில் வாண வேடிக்கை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. திருவிழாவின் 9-வது நாளான வரும் 22-ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் பெரிய தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.

வரும் 27-ம் தேதி தேர் நிலையை அடையும். தொடர்ந்து, அன்று இரவு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பரிவார மூர்த்திகளுடன் சுவாமி மீண்டும் திருமலை புறப்பாடு நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற சுவாமி நகரப் பிரவேசத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

x