எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்: கரூரில் 9 ஆண்டுகளுக்கு பின் நடந்த நேர்த்திக்கடன் நிகழ்வு


சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம்

கரூர்: கரூர் அருகேயுள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் 9 ஆண்டுகளுக்கு பின்னர், சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஆந்திராவைப் பூர்விமாக கொண்ட சதாசிவரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன். இவர் பலரிடம் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமண வாழ்க்கையில் பற்றில்லாத சிவராமகிருஷ்ணன், காடு மலைகளில் அலைந்து திரிந்தார். ஒரு கட்டத்தில் ஆடைகளை துறந்து நிர்வாணமானார்.

வைசாக சுத்த தசமியன்று நெரூர் காவிரி கரையில் வில்வமரத்தடியில் அவர் ஜீவசமாதியனார். இந்நாள் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 110-வது ஆராதனை விழாவாக கடந்த 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வைசாக சுத்த தசமி நாளான இன்று ஸ்ரீசதாசிவ ப்ரஹ்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சதாசிவரின் உருவப்படம் விழா பந்தலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு 101-வது ஆராதனை விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டு பக்தர்கள், சாப்பிட்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்தனர். சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இந்நிலையில் கரூரை சேர்ந்த நவீன்குமார், சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது அவரவர் சுயவிருப்பம் அதை தடை செய்வது வழிப்பாட்டு உரிமையை மீறுவதாகும். எனவே அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஆன்மிக விஷயங்களுக்கு அனுமதி தேவையில்லை” என தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய ஆராதனை நிகழ்ச்சியில் அன்னதானம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று உணவருந்தினர். அன்னதானத்தில் ஏதோ ஒரு ரூபத்தில் சதாசிவ ப்ரஹ்மேந்திராள் பங்கேற்பதாக ஐதீகம்.

இதனால் ஏற்கெனவே நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் அருகில் உள்ள வாய்க்காலில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் வந்து முதல் பந்தியில் சாப்பிட்ட இலையில் ஆராதனை மையம் வரை அங்கபிரதட்சணம் செய்வது வழக்கம். அதுபோலவே இன்றும் அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அங்கபிரதட்சணம் செய்தவர்களுக்கு தீபாராதனை காட்டி தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

x