லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 38-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா


கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 38-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவினையொட்டி, அன்னபட்சி வாகனத்தில் நரசிம்மர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 38-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 38-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி மிருத்சங்கரஹணம், அங்குராற்பணத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், பிரகார உற்சவமும், இரவில் அன்னபட்சி வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடந்தன.

நேற்று காலை அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவு சிம்ம வாகனத்தில் நகர் வலமும் நடந்தது. இன்று (18-ம் தேதி) ஆஞ்சநேயர் வாகனத்தில் நகர் வலமும், நாளை இரவு சேஷ வாகனத்தில் நகர் வலமும் நடக்க உள்ளன. 20-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், மாங்கல்யதாரணமும், இரவு கருட வாகனத்தில் நகர் வலமும் நடக்க உள்ளன.

வரும் 21-ம் தேதி நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சுதர்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், பூர்ணாஹூதி, மகா அபிஷேகமும், இரவு யானை வாகனத்தில் நகர் வலமும் நடக்கிறது. தொடர்ந்து குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன.

x