பொன்னியம்மன் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்


அறப்பேடு கிராமத்தில் பொன்னியம்மன் கோயிலில் பக்தர்கள் தோளில் சுமந்து செல்லும் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அறப்பேடு கிராமத்தில் பழமை வாய்ந்த பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இத்திருவிழா நேற்றுநடைபெற்றது. இதில், அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, பொன்னியம்மன் கோயிலில் தேர் வீதியுலாஉற்சவம் நடைபெற்றது. இதில்,கிராமத்தின் பாரம்பரிய முறைப்படி 36 அடி மேற்கூரை அமைக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட வண்ண,வண்ண புடவைகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை உருவாக்கி, தேரின் அடிப்பகுதியான பீடத்தில் 4 மிகப் பெரிய தண்டுகள் அமைக்கப்பட்டன.

அலங்கரிக்கப்பட்ட அம்மனை பீடத்தில் எழுந்தருளச் செய்து, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேரை தோளில் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் பம்பை, உடுக்கை, மேளதாளம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க உலா வந்தனர்.