மாங்கனி திருவிழாவையொட்டிகாரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு


காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, திருக்கல்யாண வைபவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு விழா, நேற்று முன்தினம் மாலை பரமதத்த செட்டியாரை ஊர்வலமாக (மாப்பிள்ள அழைப்பு) அழைத்து வரும் நிகழ்வுடன் தொடங்கியது.

நேற்று காலை அம்மையார் மணிமண்டபத்தில் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. தொடர்ந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் பக்தர்களிடம் காண்பித்து, அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பின்னர்சுவாமிகளுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு,16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கனி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தாம்பூல பைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், எம்எல்ஏ ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்டஆட்சியர் து.மணிகண்டன்உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நேற்று இரவு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடும், புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் திருவீதி உலா வருதலும் நடைபெற்றது. இன்று (ஜூன் 21) அதிகாலை 3 முதல் காலை 6 மணிவரை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை, 6.45 மணிக்கு பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு வருதல், காலை 9 மணி முதல் மாலை6 மணி வரை பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

அதன்பின், அம்மையார் எதிர் கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நாளை (ஜூன் 22) அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜூலை 21- ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு அம்மையார் மணி மண்டபத்தில் நாள்தோறும் மாலை பரத நாட்டியம், இசைக் கச்சேரிகள், ஆன்மிக, இலக்கிய சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

\