பராமரிப்புப் பணிக்காக பழநி கோயில் வின்ச் ரயில் சேவை நாளை நிறுத்தம்


பழநி: பழநி மலைக்கோயில் வின்ச் ரயில்கள் நாளை (ஜூன் 19) பராமரிப்பு காரணமாக 3 மணி நேரம் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரும் வகையில் 3 மின் இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு வின்ச் ரயிலிலும் தலா 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பழைய வின்ச் ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் 20 பேர், புதிய பெட்டிகளில் 35 பேர் வீதம் அமர்ந்து செல்ல முடியும்.

இந்நிலையில் நாளை (ஜூன் 19) புதன்கிழமை மூன்று வின்ச் ரயில்களிலும் பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30 மணி வரை 3 மணி நேரம் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் ரோப் கார், படிப்பாதை மற்றும் யானைப் பாதையை பயன்படுத்தி மலைக்கோயில் செல்லலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.