சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்


சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். (வலது) தேரில் பவனி வந்த தாணுமாலய சுவாமி, அறம்வளர்த்த நாயகி அம்மன்.

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் திருமுறை பாராயணம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தேவார இன்னிசை, சுவாமி வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-வது நாள் திருவிழா வான நேற்று நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து அறம்வளர்த்த நாயகி அம்மன், இந்திரன் தேர்கள் இழுக்கப்பட்டன. அம்மன் தேரில் அம்மன், தாணுமாலய சுவாமி எழுந்தருளினர். பின்னர் தேருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் ரத்ன வேல் பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ரத வீதியை சுற்றி காலை 10.30-க்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தின்போது வெயில், மழை இன்றி மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான தட்பவெப்பம் நிலவியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேரோட்டத்தில் குமரி மட்டுமின்றி பிற மாவட்டங்கள், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நள்ளிரவில் சப்தா வர்ணம் நிகழ்சி நடைபெறுற்றது. விழாவில் நிறைவு நாளான இன்று இரவு 8 மணிக்கு கோயில் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்மன், பெருமாள் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருளும் தெப்பத் திருவிழா நடைபெறு கிறது. நள்ளிரவு ஆராட்டு நிகழ்ச்சியோடு சித்திரை தெப்பத் திருவிழா நிறைவு பெறுகிறது.