பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?


சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பங்கேற்கிறார்கள் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முருகன் மாநாட்டினை சிறப்பாக நடத்திட ஒருங்கிணைப்புக் குழுவும், ஆதீன பெருமக்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்களை கொண்ட 11 செயல்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வு மாணவர்களுக்காக தனி இணையதளம் கடந்த மே மாதம் 28-ம் தேதி தொடங்கப்பட்டு, தற்போது பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வுக் கட்டுரைகளைப் பொறுத்தளவில் ஏற்கெனவே 11 தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்வதற்காக ஆதீன பெருமக்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வரங்கத்தில் வாசிக்கப்படுவதுடன், அவற்றுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

இம்மாநாடு விமரிசையாக நடைபெறும் வகையில் நிகழ்ச்சிகள், கண்காட்சி அரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை வடிவமைத்திட தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 2500 பேர் அமரும் வகையில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

பங்கேற்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை தவிர மாநாட்டை காண வரும் முருக பக்தர்களுக்கு தனியே மற்றொரு அரங்கமும், மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் வளாகம் முழுவதும் 15 இடங்களில் பெரிய எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையை பற்றி இந்து முன்னணியினர் கூறும் குறைகளை மக்கள் தங்களது செவிகளில் கூட வாங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சுகி சிவம், இந்து சமய அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் க.மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.