தஞ்சையில் ஒரே இடத்தில் 25 கருட சேவை!


படம்: ஆர்.வெங்கடேசன்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 25 கருட சேவை வைபவ விழா இன்று காலை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் கருட சேவை விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இது 90-ம் ஆண்டு விழா நேற்று இந்த விழா தொடங்கியது. நேற்று மதியம் 12 மணியளவில் வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னிதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

பின்னர், வெண்ணாற்றங் கரையிலிருந்து இன்று காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள்,

பள்ளிய அக்ரஹாரம் கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோயில்களின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு பெருமாளை வழிபட்டனர். ஏராளமானோர் திருப்பாசுரங்களை பாடியபடி வீதியுலாவாக பெருமாளுக்கு முன்பும் பின்பும் சென்றனர். இதைத் தொடர்ந்து நாளை காலை நவநீத சேவை நடைபெறவுள்ளது.

இதையொட்டி வெண்ணாற்றங்கரையில் இருந்து நாளை காலை 6 மணியளவில் உற்சவ மூர்த்திகள் புறப்பாடாகி ந்காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெறும். இதில், 16 கோயில்களின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனர்.

வெண்ணாற்றங்கரை சன்னிதிகளில் மே 31-ம் தேதி காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது. இதனிடையே, ராஜ ராஜ சமய சங்கத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, 30-ம் தேதி இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.