திண்டுக்கல் பகுதியில் பூத்து குலுங்கும் செண்டுமல்லி பூக்கள்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


தோட்டத்தில் பூத்து குலுங்கும் செண்டு மல்லி பூக்கள். | இடம்: திண்டுக்கல் அருகே பில்லம நாயக்கன்பட்டி.

திண்டுக்கல்: திண்டுக்கல், நிலக்கோட்டை மலர் சந்தையில் செண்டுமல்லி பூக்கள் ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள், நிலக்கோட்டை பகுதி கிராமங்களில் அதிக பரப்பில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயிகளிடமிருந்து பூக்களை கொள்முதல் செய்ய திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டையில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இங்கு கொள்முதல் செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடக மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மே மாதம் முதல் வாரம் வரை பூக்களின் தேவை அதிகம் இல்லாததால், அனைத்து பூக் களின் விலையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வைகாசி மாதம் தொடங்கியதும் கோயில் திருவிழா, முகூர்த்தம் என விசேஷங்கள் தொடர்ந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து படிப்படியாக விலை உயரத் தொடங்கியது. இதில் செண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆகிறது.

திண்டுக்கல் அருகே பில்ல மநாயக்கன்பட்டி, கல்லுப்பட்டி, வெள்ளோடு, நரசிங்கபுரம், சிறுமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் நிலக்கோட்ைட சுற்றுப்புற கிராமங்களில் அதிக பரப்பில் செண்டுமல்லி பயிரிடப் பட்டிருந்தது. தற்போது இவை பூத்துக்குலுங்குகின்றன.

இந்த மாத தொடக்கம் வரை ஒரு கிலோ செண்டுமல்லி ரூ. 40-க்கு விற்றது. இந்நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாவதால் செண்டுமல்லி பயிரிட்ட விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நிலக்கோட்டையை சேர்ந்த பூ வியாபாரி முருகேசன் கூறுகையில், செண்டுமல்லி பூக்கள் சமீபத்தில் பெய்த கோடை மழையால் செடியிலேயே சேதமடைந்தன. இதனால் மார்க் கெட்டுக்கு வரத்து குறையத் தொடங்கியது.

தற்போது சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருப்பதால், பூக்கள் ஈரப்பதம் இல்லாமல் மார்க்கெட்டுக்கு வருகிறது. தற்போது கோயில் திருவிழாக்கள், முகூர்த்தம் என தேவை அதிகரித்த நிலையில் செண்டுமல்லி பூக்கள் வரத்து குறைந்ததால், ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனையாகிறது.

கோடை மழையால் பூ விவ சாயிகளுக்கு சில நாட்கள் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை ஈடு செய்யும் வகையில் தற்போது கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது என்று கூறினார்.