ஆண்டு முழுவதும் வருமானம்... அள்ளித்தரும் பப்பாளி... - விளாத்திகுளம் விவசாயிகள் அசத்தல்!


விளைந்த பப்பாளிகள் விற்பனைக்காக வாகனத்தில் ஏற்றப்படுகின்றன.

கோவில்பட்டி: மானாவாரி பயிருக்கு மாற்றாக விளாத்திகுளம் பகுதியில் பப்பாளி சாகுபடி செய்து, விவசாயிகள் சாதித்து வருகின்றனர். விளாத்திகுளம் தொகுதியில் ஒரு பகுதி வைப்பாற்று பாசனத்தில் இருந்தாலும், பெரும்பாலான நிலங்கள் வானம்பார்த்த பூமியாக மானாவாரி நிலங்களாக உள்ளன.

இங்கு உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் விளையும் சின்ன வெங்காயம், முண்டு வத்தல் ஆகியவற்றுக்கு தனிச் சிறப்பு உண்டு.

விவசாயிகளுக்கு கைகொடுத்து வந்தமக்காச்சோளம் சாகுபடி, கடந்த சில ஆண்டுகளாக குருத்துப்பூச்சிகளால் பாதிக்கப்பட்டது. மிகப்பெரிய நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்தனர். அதன்பின் மாற்று வழியை தேடியதில், அவர்களுக்கு கிடைத்தது தான் பப்பாளி சாகுபடி.

கிங்காங், லெட்லேடி: பப்பாளியில் ‘கிங்காங்’, ‘லெட்லேடி’ என, 2 வகைகள் உள்ளன. இவை தோட்டப் பாசனத்தில் விளைவிக்கப்படுகின்றன. கிங்காங் பப்பாளி வகையை ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள், 6-க்கு 6 அடி என்ற இடைவெளிவிட்டு ஊன்ற வேண்டும். இது 8-வது மாதத்தில் காய் பிடிக்கும். காய் ஓரளவு பருத்த பின், தோல் பகுதியில் கீறி விடுவார்கள். அப்போது வடியும் பால் மரத்தின் அடியில் வைத்துள்ள பாத்திரத்தில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு 15 நாட்களுக்கு ஒரு முறை பால் சேகரிக்கப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு 210 கிலோ பால் கிடைக்கிறது. ஒரு கிலோ பால் ரூ.130-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுவதாக கூறப்படுகிறது.

பால் வடிந்து முடிந்த பப்பாளி காய் ஏக்கருக்கு 20 டன் வீதம் கிடைக்கிறது. ஒரு கிலோ பப்பாளி காய்ரூ.3-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 4 முறை ரூ.80 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.

மற்றொரு வகையான லெட்லேடி பப்பாளி பழம் அன்றாடம் நாம் சாப்பிடக்கூடியது. இந்த பப்பாளி விதை 10 கிராம் ரூ.4,500 ஆகும். ஏக்கருக்கு 700 விதைகள் ஊன்ற வேண்டும். ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.18 வரை விலை போகிறது. வாரத்துக்கு ரூ.20 ஆயிரம் முதல் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. பப்பாளி மரங்கள் வளர்க்க 10 ஏக்கருக்கு 4 வேலை ஆட்கள் இருந்தாலே போதுமானது.

விளாத்திகுளம் அருகே சூரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில்
பப்பாளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

தண்ணீர் தேவை குறைவு: சூரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மலர் கண்ணன் கூறும்போது,” ஒரு ஏக்கருக்கு 1,000 பப்பாளி கன்றுகள் நடவு செய்யலாம். முதலில் வாரம் ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். 3 மாதங்களுக்கு பின்னர் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

8 மாதத்தில் பப்பாளியை பறித்து, விற்பனைக்கு அனுப்பலாம். வாரத்துக்கு சுமார் 4 குவிண்டால் வரை கிடைக்கிறது. அருப்புக்கோட்டை சந்தைக்கு அனுப்பி வைக்கிறோம். பப்பாளி மரங்களுக்கு ஊடு பயிராக வெங்காயம், கடலை உள்ளிட்டவற்றை நடவு செய்யலாம். அவற்றிலும் ஒரு மகசூல் எடுத்துவிடலாம்” என்றார்.

சொட்டு நீர் பாசனம்: பப்பாளி சாகுபடியை ஊக்கப்படுத்த கிள்ளிகுளம் வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் விதைகள் இலவசமாக வழங்க வேண்டும். பப்பாளி விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் மட்டுமே அதன் ஆயுட்காலம்.

மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகிறது. அதனை அரசே ஏற்று முழு மானியத்தில் மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்க வேண்டும் என, கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தெரிவித்தார்.

x