கோடை மழை பெய்தும் வறண்டு காணப்படும் நீர்நிலைகள் @ சேலம்


மேட்டூரை அடுத்த தார்காடு பகுதியில் உள்ள செம்மலை ஏரி தண்ணீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது.

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தும் நீர்வரத்து இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு காட்சியளிக் கின்றன.

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு ஆதாரமாக, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறை பராமரிப்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

பின்னர், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் மின் மோட்டார் பாசன முறை பயன்பாட்டுக்கு வந்த பிறகு, நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள் பராமரிப்பில் முழு கவனம் செலுத்தப்படவில்லை. இதனால் நீர்நிலைகள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் உள்ளன. மேலும், கடந்த சில மாதங்களாக கோடை வெயில் தாக்கத்தாலும் நீர் நிலைகள் வறண்டு, செடி, கொடிகள் காய்ந்து காட்சியளிக்கிறது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் தீவனம், தண்ணீர் கிடைக்காமல் தவித்தன.

இந்நிலையில், மேட்டூர், எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் ஏராளமான சிற்றோடைகள், கிழக்கு, மேற்கு கால்வாய் உள்ளிட்டவை உள்ளன. ஆனால், பரவலாகவும், கனமழை பெய்தும், சிற்றோடைகள், கால்வாய்களில் நீர்வரத்து இல்லை. அதேபோல, நீர்வரத்து இல்லாததால் ஏரி மற்றும் குளங்களும் வறண்டு காட்சியளிக்கின்றன. குறிப்பாக, செம்மலை ஏரி, எம். காளிப்பட்டி ஏரி, பொட்டனேரி, குன்றிவளவு ஏரி உள்ளிட்டவற்றில் பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த 5 மாதங்களுக்கு பிறகே மழை பெய்துள்ளது. தற்போது பெய்துள்ள மழை நிலத்தடி நீரை சமன் செய்து வருகிறது. மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஏரி, குளம் ஆகியவை பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளன. பெரும்பாலான நீர் வரத்து கால்வாய்கள், சிற்றோடைகள், பராமரிப்பின்றியும், ஆக்கிரமிக்கப் பட்டும் உள்ளதால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் புகுந்து விடுகிறது.

இனி வரும் நாட்களில், பருவ மழை எதிர்பார்க்கப்படும் நிலையில், நீர்நிலைகள், நீர் வழித்தடங்களை தூர் வாரினால் மட்டுமே நீர்வரத்து இருக்கும். விவசாயம், நிலத்தடி நீர், குடிநீர் உள்ளிட்டவற்றுக்கும் எந்த பாதிப்பும் வராது. எனவே, உள்ளாட்சி, வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, வேளாண் துறை ஆகியவற்றின் மூலம் நீர் வழித்தடம், நீர்நிலைகளை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.