உதகையில் சுற்றுலா பயணிகளிடம் குதிரை ஓட்டிகள் விதிமீறலா?


வனத்துக்குள் அத்துமீறி சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து சென்ற குதிரை ஓட்டி.

உதகை: சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, உதகை படகு இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் குதிரை சவாரி நடத்தப்படுகிறது. இதில், குதிரையை வைத்துள்ளவர்கள், சுற்றுலா பயணிகளை அதில் அமரவைத்து சில கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்காட்டி வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட தொகை கட்டணமும் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில், குதிரை சவாரி நடத்துபவர்கள் சிலர் மது மற்றும் கஞ்சா போதையில் சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், உதகை படகு இல்லத்தில் குதிரை சவாரி நடத்துபவர் ஒருவரின் குதிரையில் சுற்றுலா பயணி ஏறி சென்றார்.

அப்போது, மிரண்ட குதிரையிலிருந்து சுற்றுலா பயணி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதுதொடர்பாக, அந்த குதிரை சவாரி நடத்துபவரிடம் உதகை போலீஸார் விசாரித்தனர். இது, பின்னர் சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரணை என்ற பெயரில் பணம் கேட்டு பெண் ஆய்வாளர் தன் கணவரை தாக்கியதாக, தொடர்புடைய குதிரை சவாரி நடத்துபவரின் மனைவி, காவல் கண்காணிப்பா ளரிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், உதகை கோட்டாட்சிய ருக்கு புகார் மனுவை பெண் காவல் ஆய்வாளர் மீனா பிரியா அனுப்பியுள்ளார். அதில், ‘‘உதகை படகு இல்லம் பகுதியில்அனுமதி பெறாமல் சிலர் குதிரை சவாரி நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் குதிரை சவாரியில் ஈடுபடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் விபத்து ஏற்படுகிறது.

உதகை படகு இல்லத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக, சவாரிக்காக
சாலையில் நிறுத்தப்பட்டுள்ள குதிரை.

அனுபவம்மிக்க குதிரை ஓட்டிகள், குதிரைகளுக்கு மட்டும் உரிமம் வழங்கி, மற்ற அனுபவமில்லாத குதிரை ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நபர்கள் குதிரை சவாரியில் கஞ்சா விற் கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘உதகை படகு இல்லத்தில் பல ஆண்டுகளாக குதிரை சவாரி நடத்தப்படுகிறது. பொருளாதார ரீதியாக பிங்தங்கிய மக்கள், குதிரை சவாரி நடத்துகின்றனர். ஆனால், இவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்கள் இல்லை. மேலும், சவாரி ஏறும்போது பேசும் கட்டணத்தைவிட, சவாரி முடிந்த பின்னர் கூடுதல் கட்டணத்தை சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கின்றனர்.

சிலர், எந்தவித அனுமதியும் இல்லாமல், வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை குதிரைகளில் அழைத்துச் சென்று சவாரி செய்கின்றனர். இதற்கு கூடு தல் கட்டணமும் வசூலிக்கின்றனர்.

குதிரைகளை தங்கள் வசம் வைத்து பராமரிக்காமல், சவாரி முடிந்ததும் தீவனம் அளிக்காமல் விட்டுவிடுவதால் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக உதகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறும்போது, “நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் குதிரைகள் பிடிக்கப்பட்டு, காந்தல் பகுதியிலுள்ள கூடத்தில் அடைக்கப்படும். பிடிக்கப்பட்ட அன்றைய தினமே திரும்பப் பெறுவதற்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

கால்நடைகளை திரும்பப் பெறுவதற்கு தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் பராமரிப்புதொகையாக, நாளொன்றுக்கு ரூ.500 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஒரே கால்நடைகள் மூன்று முறைகளுக்கு மேல் பிடிக்கப்பட்டால், விலங்குகள் வதை தடுப்பு சங்கத்திடம் அவை ஒப்படைக் கப்படும்” என்றார்.

கோட்டாட்சியர் மகராஜ் கூறும்போது, “குதிரை சவாரி நடத்துபவர்கள் குறித்து காவல்துறையினர் அளித்துள்ள மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார்.