இது காவிரி ஆறா? இல்ல.. அமேசான் காடா? - நீரின் போக்கை திசை மாற்றும் சீமைக் கருவேல மரங்கள்


கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் காவிரி ஆற்றின் தலைப்பு பகுதியிலேயே காடு போன்று வளர்ந்துள்ள சீமைக் கருவேல செடிகள்.

தஞ்சாவூர்: கல்லணையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வரை காவிரி ஆற்றில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் மண்டி காடு போல காட்சியளிக்கிறது. இதனால், மணல் திட்டுகள் உருவாகி நீரின் போக்கை திசைமாற்றி வருகிறது. பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று பெயர் பெற்ற ஆறு, ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பெரும்பாலும் வறண்ட காவிரியாகவே உள்ளது. இதனால் பல இடங்களில் புதர் மண்டி காடுகள் போல காட்சியளிக்கிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வரை ஆற்றுக்குள் சீமைக்கருவேல மரங்கள், காட்டாமணக்கு செடிகள் மண்டி காடு போல உள்ளது. இதனால், ஆற்றில் தண்ணீர் வரும்போது, அதன் போக்கு திசை மாறிச் செல்கிறது.

மேலும், இந்த மரம், செடி கொடிகளால் மண் திட்டுகளும் ஏற்பட்டு, தண்ணீர் செல்லும் பாதையும் குறுகி காணப்படுகிறது. விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி வரை செல்லக்கூடிய காவிரியில் சீமைக்கருவேல மரங்களும், செடிகொடிகளும் மண்டி இருப்பதால், 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது.

அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக காவிரியில் போதிய தண்ணீர் செல்லாத காரணத்தால், காவிரி ஆறு கட்டாந்தரையாக காணப்படுகிறது. எனவே, இவற்றை முற்றிலும் அகற்றினால் மட்டுமே கடைமடைப் பகுதிக்கும், காவிரியின் கிளை ஆறுகளுக்கும் தண்ணீர் விரைந்து செல்லும் நிலை ஏற்படும்.

கோவிலடி அருகில் காவிரி ஆற்றில் உருவாகியுள்ள மணல்திட்டுகள்.

இதுகுறித்து காவிரி உரிமை விவசாய செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார் கூறியதாவது: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான காவிரி ஆறு, நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தில் கலந்துள்ளது. இந்த ஆற்றை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை. கல்லணையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வரை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு காவிரி தன் போக்குக்கு செல்ல முடியாமல் திசை மாறி, திணறி வருகிறது.

ஆற்றுக்குள் எங்கு பார்த்தாலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதால், இதைப் பார்க்கும்போது ஆறா? அல்லது காடா? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. தலைமடை பகுதியிலேயே காவிரி ஆறு இப்படி இருந்தால், இங்கிருந்து செல்ல வேண்டிய தண்ணீர் எப்படி கடைமடைப் பகுதி வரை செல்லும். தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றங்கள் கூறிய பின்னர், மக்கள் இயக்கமாக மாறி ஆங்காங்கே அகற்றப்பட்டது.

கோவிலடி பகுதியில் காவிரி ஆற்றுக்குள் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்.
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

ஆனால், அப்போதும் காவிரி ஆற்றில் வளர்ந்த சீமைக்கருவேல மரங்களை நீர்வளத் துறையினர் அகற்றவில்லை. இப்போது ஆற்றில் மணலே தெரியாத அளவுக்கு சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் ஆங்காங்கே வளர்ந்திருப்பதால், இதை அகற்ற சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும்.

தற்போது காவிரி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து பாசனத்துக்கு இந்தாண்டு தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே அகற்ற வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காவிரி ஆற்றில் மண்டியுள்ள சீமைக்கருவேல மரங்களையும், செடி, கொடிகளையும் அகற்றி, மணல்திட்டுகளை சமப்படுத்துவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கினால் பணிகள் விரைந்து தொடங்கப்படும்’’ என்றனர்.