சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிகரிக்கும் கடலரிப்பு!


சென்னை மாநகரில் கடல் சீற்றம் ஏற்படும்போதெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக பட்டினப்பாக்கம் உள்ளது. இப்பகுதியில் கடற்கரையோரமாக கட்டப்பட்ட வீடுகள் பல கடலரிப்பால் பாதிக்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டன. அவ்வப்போது வீடுகளுக்குள்ளும் கடல் அலை புகுந்து மணலை நிரப்பிவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகதமிழக கடலோர பகுதி கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் பட்டினப்பாக்கம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு திடீரென கடற்கரை மணல் அடித்துச் செல்லப்பட்டு, கடலரிப்பை ஏற்படுத்தியது. இதனால் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டன.

பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்படும் கடலரிப்பால், படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாத நிலை இருப்பதாகவும், கடலோர பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மீனவர் பாளையம் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கடலரிப்பை தடுக்க கற்கள் கொட்டப்பட்டன. மேலும் தற்போது அடையார் முகத்துவாரப் பகுதியில் தூர்வாரி, அங்கேயே மணலை மலைபோல் குவித்துள்ளனர். இவற்றின் தாக்கத்தால் பட்டினப்பாக்கத்தில் தற்போது கடலரிப்பு அதிகரித்து இருக்கலாம்“ என்றார்.

மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவன முன்னாள் முதன்மை விஞ்ஞானியும், கடல்சார் ஆய்வாளருமான வி.எஸ்.சந்திரசேகர் கூறும்போது, “வழக்கமாக பவுர்ணமி, அமாவாசை காலங்களில் கடல் அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் சிறிய அளவில் கடலரிப்பு ஏற்படும்.

இயல்பாகவே கடலோரப் பகுதிகளில் நீரோட்டம் இருக்கும். அதை தடுக்கும் வகையில் செயற்கையாக ஏதாவது செய்தால், அதன் அருகில் கடலரிப்பை ஏற்படுத்தும். தற்போது கூவம் ஆற்றின் முகத்துவாரம், மணல் திட்டுகளால் மூடாமல் இருக்க, கற்களால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. அதன் தாக்கத்தாலும் கடல் நீரோட்டம் பாதிக்கப்பட்டு, பட்டினப்பாக்கம் பகுதியில் கடலரிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இதுதான் முக்கிய காரணம் என கூற முடியாது“ என்றார்.