‘குப்பை’ நகரமாகும் கோயில் நகரம் காஞ்சிபுரம்!


காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி தனியார் மூலம் நடைபெறுகிறது. ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவனத்திடம் விடப்பட்டு அவர்கள் எவ்வளவு தொழிலாளர்களை வைத்து குப்பைகளை அகற்றுகின்றனரோ அதன் அடிப்படையில் தொகை வழங்கப்பட்டது. தற்போது அந்த ஒப்பந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சியில் எவ்வளவு குப்பைகள் அள்ளப்படுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 டன் குப்பைகள் என்ற அடிப்படையில் மாதத்துக்கு ரூ.1 கோடியே 16 லட்சம் வழங்கப்படுகிறது (ஒரு சிலநாட்களில் 100 டன் என்பது குறையலாம்).

ஆனாலும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. குப்பைகளை முழுமையாக அகற்றவும் கோயில் நகரின் தூய்மையை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்தம் எடுத்தவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு 58 ஓட்டுநர்களை வைத்திருக்க வேண்டும், ஆனால் 30 பேர் மட்டுமே உள்ளனர். இதேபோல் பேட்டரி வாகனங்கள் 93-க்கு 70-ம்,இலகு ரக வாகனங்கள் 51-க்கு 26-ம், பெரியவாகனங்கள் மட்டுமே 6-க்கு 6 பேரும் உள்ளனர். இதேபோல் ஊழியர்களிலும் பற்றாக்குறை உள்ளது.

காஞ்சிபுரம் கிருஷ்ணன் தெரு பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

ஒரு நாளைக்கு 100 டன் வீதம், ஒருமாதத்துக்கு 3,000 டன் குப்பைகள் அள்ளப்படுவதாக கணக்கிட்டு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வீதம், ரூ.1 கோடியே 16 லட்சம் வரை தொகை வழங்கப்படுகிறது. 100 டன் குப்பைகள் தினம்தோறும் அப்புறப்படுத்தப்பட்டும் எவ்வாறுஇவ்வளவு குப்பைகள் மாநகரில் தேங்குகிறது. முறையாக அவ்வளவு குப்பைகள் அகற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துகின்றனர்.

ஜி.சீனுவாசன்

மேலும், இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜி.சீனுவாசன் கூறும்போது, ‘காஞ்சிபுரம் சுற்றுலாவுக்கும், பட்டுக்கும் புகழ்பெற்ற மாநகரம். இந்த ஊருக்கு அதிக அளவு வெளிமாநில பயணிகள் வருகின்றனர். இந்த நகரை சுகாதாரமாக பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் குப்பைகள் அதிகம் தேங்கி நிற்பதால் முகம் சுளிக்க வேண்டிய நிலையே உள்ளது.

மேலும்மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்த நேரத்தில் குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை என்றால் தொற்றுநோய் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். எனவே மாநகராட்சி குப்பைகளை அகற்றும்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.

மேலும் சிலர் கூறும்போது, ‘காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒரு மாதத்துக்கு சுமார் ரூ.1 கோடியே 16 லட்சம் அளவுக்கு குப்பைகள் அள்ளபணம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணத்தை கொண்டு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காதகுப்பை என்று தரம்பிரித்தே மக்களிடம் இருந்துவாங்க வேண்டும்.

பல இடங்களில் மொத்த குப்பைகளையும் அப்படியே வாங்கிச் சென்று நத்தப்பேட்டை பகுதியில் கொட்டி விடுகின்றனர். அரசியல் அழுத்தம் காரணமாக இவை குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கேள்வி எழுப்புவதில்லை’ என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகனிடம் கேட்டபோது, ‘குப்பைகள் தரம் பிரித்தே மக்களிடம் வாங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு சில இடங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை சேர்த்து வாங்கினால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து 9 இடங்களில் உரம் தயாரிக்கப்படுகிறது’ என்றார்.