திருச்சி காவிரி ஆற்றில் அமையுது புதிய பாலம் - போக்குவரத்து நெரிசலுக்கு பிறக்குது விடிவு காலம்!


திருச்சி- ஸ்ரீரங்கம் இடையே காவிரி ஆற்றில் புதிய பாலம் கட்டப்படவுள்ள பகுதியில் கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு ஆயத்தப்படுத்தும் வகையில் தூய்மை செய்யப்பட்டுள்ள பகுதி. | படம்: ர.செல்வமுத்துகுமார் |

திருச்சி: திருச்சி மேலசிந்தாமணி- மாம்பழச்சாலை இடையே காவிரி ஆற்றில் புதிய பாலம் கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் ஏற்கெனவே இருந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

இதனிடையே திருச்சி- ஸ்ரீரங்கம் இடையே வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு, அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அரசுக்கு கருத்துருவை அனுப்பி வைத்தது.

கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அரசின் நிதிநிலை அறிக்கையில், இந்தப் பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பாலம் கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை மாநில நெடுஞ்சாலைத்துறை கோரியது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்தல், ஒப்பந்ததாரர் தேர்வு உள்ளிட்ட நடைமுறைகள் தேர்தல் முடிந்தவுடன் இறுதி செய்யப்பட்டுள்ளன.

ரூ.106 கோடி ஒதுக்கீடு: இந்த புதிய பாலம் தற்போதுள்ள பாலத்துக்கு மேற்குபுறத்தில் திருச்சி மேலசிந்தாமணியிலிருந்து மாம்பழச்சாலை வரை 545 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் அகலமுள்ள நடைபாதையுடன் சேர்த்து 17.75 மீட்டர் அகலத்தில் நான்குவழித்தடங்களுடன் அமைகிறது.

இதற்கென ரூ.106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாலம் கட்டுமானத்துக்கு ரூ.68 கோடியும், நில ஆர்ஜிதத்துக்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர அணுகுசாலைகள், ரவுண்டானா கட்டுமானம், மின்வசதி, மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளை மாற்றுதல் உள்ளிட்டவைகளுக்கு மீதித் தொகை செலவிடப்படும்.

ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், புதிய பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.

இதற்கென மாம்பழச்சாலை பகுதியிலிருந்து காவிரி ஆற்றின் கரைக்கு கட்டுமான தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்காக வழி ஏற்படுத்தப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தவாரத்தில் பூமி பூஜை போடப்பட்ட பின்னர், பணிகள் தொடங்கப்படவுள்ளன. பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் கட்டுமானத்துக்காக மேலசிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் இடங்கள் மற்றும் மாம்பழச்சாலை பகுதியில் மகளிர் காவல் நிலையம், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட சில அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் இடிக்கப்படவுள்ளன.