ஆர்வம் காட்டாத வடமாநில தொழிலாளர்கள்: தமிழக தொழில் நிறுவனங்களில் 30% ஆள் பற்றாக்குறை


கோப்புப் படம்

கோவை: வட மாநிலங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களில் பலர் மீண்டும் தமிழகம் திரும்ப ஆர்வம் காட்ட மறுப்பதால் கோவை உள்பட தமிழகத்திலுள்ள ஜவுளி, வார்ப்படம் உள்ளிட்ட உற்பத்தித்துறை சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களில் 30 சதவீதத்திற்கும் மேல் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) முன்னாள் தலைவர் ரவிசாம் கூறும்போது, ‘‘உற்பத்தித்துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்ய உடல் சார்ந்த உழைப்பு அதிகம் தேவை, பணியின் தன்மை கடினம் என்பன உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் வார்ப்படம், ஜவுளித்தொழில் உள்ளிட்ட பல துறைகள் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை நம்பியே செயல்பட்டு வருகின்றன. இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக தொழிலாளர்கள் நீண்ட விடுமுறை எடுத்துள்ளனர். பலர் மீண்டும் பணிக்கு திரும்ப ஆர்வம் காட்டவில்லை. இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியுள்ளது,’’ என்றார்.

மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின்(ஓஸ்மா) தலைவர் ஜெயபால் கூறும்போது, ‘‘திறமையான தொழில்முனைவோர், திறமையான தொழிலாளர்களுக்கு பெயர் பெற்றது தமிழ்நாடு. உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்களில் பலர் மீண்டும் தமிழகம் திரும்ப ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். எனவே இங்கே 30 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது.

அவர்கள் பணி திறமையை மட்டும் கொண்டு சென்றிருந்தால் பரவாயில்லை, தமிழக தொழில்முனைவோர் செயல்படுத்தும் யுக்திகளையும் கற்று தங்கள் மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளது மிகவும் ஆபத்தானது. இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை அதிகரிக்கும்’’ என்றார்.

தீர்வு என்ன? - கோவை குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முக குமார், ‘கொசிமா’ முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர் கூறும்போது, ‘‘வார்ப்பட தொழில் நிறுவனங்களின் உட்பிரிவுகளில் காணப்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை தற்போது வார்ப்பட தொழில் நிறுவனங்களிலும் ஏற்பட தொடங்கியுள்ளது.

பிஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் தற்போது பணி வாய்ப்பு அதிகரித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு சார்பில் திறன் மேம்பாட்டு மையங்கள் சிறப்பான முறையில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கு தீர்வாகும்’’ என்றனர்.