கொடைக்கானலில் ‘மல்டிலெவல் கார் பார்க்கிங்’ அமைக்கும் ஆரம்ப கட்ட பணி தொடக்கம்


கொடைக்கானல் நகரில் விடுமுறை தினத்தில் ஏரிச் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். (கோப்பு படம்)

திண்டுக்கல்: கொடைக்கானலில் போக்குவரத்து இடையூறால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் சிரமப்படுவதைத் தவிர்க்க பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் (மல்டிலெவல் கார் பார்க்கிங்) அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாட்கள்,தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனைத் தவிர்க்க கொடைக்கானலில் ‘மல்டிலெவல் கார் பார்க்கிங்’ அமைக்க வேண்டும் என்பது கொடைக்கானல் நகர் மக்கள் மட்டுமின்றி, வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கான ஆரம்பக் கட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான காலியிடத்தை கேட்டு நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக கொடைக்கானல் நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மினி வேன், மினி பேருந்துகளை இயக்குவது குறித்தும், உரிய வாகன நிறுத்தம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம், மாநில நகராட்சிகளின் இயக்குநருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதில், ஆண்டுக்கு 75 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வந்து செல்கின்றனர். ஆண்டு ஒன்றுக்கு 3.25 லட்சம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றன. போதுமான வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததால் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகேயுள்ள போக்குவரத்து துறைக்குச் சொந்தமான இடத்தில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மாநில நகராட்சி நிர்வாக இயக்குநர், மாநிலப் போக்குவரத்துத் துறைக்கு இடம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பழநி தொகுதி எம்எல் ஏ இ.பெ.செந்தில்குமார் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க போக்குவரத்து துறைக்குச் சொந்தமான இடத்தை வழங்கக் கோரி அமைச்சர் சிவசங்கரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தற்போது பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க நிலத்தைப் பெறும் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த இடத்தை நகராட்சி நிர்வாக வசம், போக்குவரத்து துறை விரைவில் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் பல்லடுக்கு வாகன நிறுத்தும் மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.